பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச கைப்பேசிகள் கண்காட்சியில், பல நிறுவனங்கள் தங்கள் புதிய தொழில்நுட்ப சாதனங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த ஷாவ்மி நிறுவனம், தனது முதல் வயர்லெஸ் ஆகுமெண்டட் ரியாலிட்டி கண்ணாடியை வெளியிட்டுள்ளது.
ஆகுமெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டபோது, இது எதிர்காலத்திற்கான திட்டமாகவும், அனைவரிடமும் அவசியமாக காணப்படும் கருவியாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ஆக்குமென்டரி ரியாலிட்டி கருவி மூலம் பெறப்படும் சேவைகள் குறைவு என்பதாலும், அதன் வடிவமைப்பு அளவில் பெரியதாக இருந்ததாலும், மக்களிடையே வரவேற்பு இல்லாமல் போனது. ஆனால், இந்த குறைபாடுகளை களையும் வகையில், ஷாவ்மி நிறுவனத்தின் கண்ணாடி அமைந்துள்ளதால், கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷாவ்மி வயர்லெஸ் ஆகுமெண்டட் ரியாலிட்டி கண்ணாடியின் மொத்த எடை 126 கிராம்ஸ் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், இதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம், பயனர்கள், செயலியை திறப்பது, பக்கங்களை நகர்த்துவது, செயலியில் இருந்து வெளியேறி மீண்டும் முதல் பக்கத்திற்கு செல்வது, போன்ற செயல்களை கைப்பேசி இல்லாமல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.