நாசா, ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலம், மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளது. இந்நிலையில், அங்கு செல்லும் மனிதர்களுக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. ஆக்சியம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் புதிய ஆடையை வடிவமைத்துள்ளது.
முன்னதாக, நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சென்ற போது, வெள்ளை நிறத்தில், பெரிய அளவில், புடைப்பாக இருக்கும் படியான ஆடையை அணிந்திருந்தனர். அதற்கு மாற்றாக, கரும் சாம்பல் நிறத்தில், உடம்போடு ஒட்டிய வகையில், புதிய ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடையில், ஆரஞ்சு மற்றும் நீல நிற வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆக்சியம் நிறுவனத்தின் லோகோ இடம் பெற்றுள்ளது. எனினும், வீரர்கள் அணியும் உடை, வெப்பச்சூழல் காரணமாக வெள்ளை நிறத்தில் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய உடை, நிலவில் எளிமையாக அசைவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், நவீன தொழில்நுட்பங்கள் துணையுடன், அதிக பாதுகாப்பு தருவதாக இந்த உடை உள்ளது என்று நாசா கூறியுள்ளது.