பத்தாவது உலக வர்த்தக மாநாடு குஜராத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். இந்த மாநாட்டில், கிழக்கு தைமூர் அதிபர் ஜோஸ் ரமோஸ் ஹோர்தா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. இவர்கள் தவிர, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, உலக வர்த்தக கண்காட்சி நேற்று திறக்கப்பட்டது. காந்தி நகரில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 13 அரங்கங்கள் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.