வங்கதேசத்தின் 22 வது அதிபராக, முஹம்மது ஷாபுதின் இன்று பதவி ஏற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழாவில், பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இதர அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி தலைமையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க பங்காபவன் தர்பார் அறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் குடிமை பணி அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஞாயிற்றுக்கிழமையோடு அப்துல் ஹமீது - ன் அதிபர் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, ஷாபுதின் பதவியேற்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அரசியலில் மிகவும் பிரபலமான இவருக்கு வயது 73. இவர் பதவியேற்ற ஓராண்டுக்குள், வங்கதேசத்தில் பொது தேர்தல் நடைபெற உள்ளதால், இவரது தலைமை முக்கியமாக பார்க்கப்படுகிறது.