சென்னை வண்டலூரை அடுத்த கிளம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் நாளை முதல் மாதாந்திர சலுகை விற்பனை சீட்டு மையம் செயல்பட உள்ளது.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த 30.12.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் நலன் கருதி நாளை முதல் மாநகர போக்குவரத்து கழக மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்பட உள்ளது. இந்த பயண சீட்டு விற்பனை மையத்தில் விருப்பம் போல் பயணம் செய்வதற்காக ரூபாய் ஆயிரம் மதிப்பிலான பயண அட்டை, மாதாந்திர சலுகை பயண அட்டை மற்றும் 50 சதவீதம் மாணவர் சலுகை பயண அட்டை ஆகிய பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வழங்கப்படும். மேலும் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண சீட்டுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்களும் வழங்கப்பட உள்ளன.