மூடிஸ் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை, 7.7 சதவீதத்திலிருந்து 7% ஆக குறைத்து அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த மே மாதத்தில் 8.8 சதவீதமாக கணிக்க பட்டிருந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, செப்டம்பர் மாதம் 7.7% ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் நாணய கொள்கைகளில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி கணிப்பு குறைய குறைய பணவீக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், பணவீக்கம் அதிகரித்தால், வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு, பொருளாதார வளர்ச்சி தடைப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023 ஆம் ஆண்டில் 4.8% வரை குறையும் என்று கணித்துள்ளது. அதன் பின்னர், 2024 ஆம் ஆண்டு வாக்கில், 6.4 சதவீதமாக உயரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு குறையத் தொடங்கியது. அதே வேளையில், மத்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது கவனிக்கத்தக்கது.