நைஜீரியாவில் கனமழை காரணமாக சிறையில் இருந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்
நைஜீரியா நாட்டின் தலைநகர் அபுஜா அருகே நைஜர் மாகாணம் உள்ளது. இங்கு சுலேஜா என்ற இடத்தில் பழைய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு கனமழை பெய்தது. இதையடுத்து சிறையில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது. இந்த சூழலை பயன்படுத்தி சிறையில் இருந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர் என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் சிறை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 10 கைதிகளை பிடித்துள்ளனர். மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சுலேஜாவை ஒட்டி அடர்ந்த காடு ஒன்று உள்ளது. கைதிகள் அங்கு தப்பி ஓடி இருந்தால் அவர்களை பிடிப்பது மிகவும் கடினம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த காட்டில் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிகமாக வாழ்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 70% பேர் விசாரணை கைதிகள் என கூறப்படுகிறது.