அமர்நாத் புனித யாத்திரைக்காக 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாக அமர்நாத் கோவில் வாரியம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 62 நாட்கள் நடைபெற உள்ளது. அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் அமர்நாத் புனித யாத்திரைக்காக சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஜம்முவின் பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து முதல் குழு நாளை புறப்படுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அமர்நாத் கோவில் வாரியம் தெரிவித்துள்ளது.