மக்களவையில் எந்தவொரு எம்பி.யின் சாதி, மதத்தை குறிப்பிட்டு பேச கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், 4வது நாளான நேற்று அவை கூடியதும் கேள்வி நேரத்தில் காங்கிரஸ் எம்பி ஏ.ஆர். ரெட்டிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தான் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் என்பதால் அமைச்சர் தன்னை விமர்சிப்பதாக ஏ.ஆர்.ரெட்டி குற்றம்சாட்டினார்.
இதையடுத்து பேசிய சபாநாயகர், மக்கள் எம்பி.க்களின் சாதி, மதத்தை பார்த்து தேர்ந்தெடுப்பதில்லை. அவையில் எந்தவொரு எம்பி.யின் சாதி, மதத்தையும் குறிப்பிட்டு உறுப்பினர்கள் பேச கூடாது. மீறும் எம்பி. மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.