தொடர் கனமழையின் காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள வளர்ப்பு யானைகளை பார்க்கவும், சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது அதிகமாக இருக்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு பகுதியில் மின்சார இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நலம் கருதி இன்று முதல் 22-ம் தேதி வரை மூன்று நாட்கள் முதுமலை புலிகள் காப்பகத்தின் சூழல் சுற்றுலா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.