சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பங்குச் சந்தையில் ஈடுபடுவதில் இந்திய நகரங்களின் பங்கு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்கள் பங்குச் சந்தையில் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக, இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குச் சந்தை நடவடிக்கையில், 80 விழுக்காடுகள், இவ்விரு நகரங்களில் இருந்து மட்டுமே வருவதாக அறிக்கை கூறுகிறது.
நடப்பு நிதி ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பங்குச் சந்தையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த பங்குச்சந்தை நடவடிக்கைகளில் மும்பை 67.8% பங்களிப்பைக் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மும்பையைத் தொடர்ந்து, அகமதாபாத் 11.4 சதவீதமும், சென்னை 5.1 சதவீதமும் பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்எஸ்இ தளத்தின் பங்கு வர்த்தக மதிப்பில், பெங்களூரு (0.7%), டெல்லி (4.6%), கொல்கத்தா (0.9%) மற்றும் ஐதராபாத் (2.4%) ஆகிய நகரங்களும் பங்கு வகிக்கின்றன. பிஎஸ்இ தளத்தின் பங்கு வர்த்தக மதிப்பிலும், மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களே முன்னிலையில் உள்ளன. மும்பை, 36.4 சதவீத பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. அகமதாபாத் 21.3 சதவீத பங்குகளுடன் இரண்டாம் இடத்திலும், கொல்கத்தா 2.3 சதவீத பங்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மேலும், பிஎஸ்இ தளத்தின் பங்கு வர்த்தக மதிப்பில், பெங்களூரு (0.3%), டெல்லி (2.2%), சென்னை (0.2%) மற்றும் ஐதராபாத் (0.1%) ஆகிய நகரங்களும் பங்கு வகிக்கின்றன.
மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களில் உள்ள மக்கள் அதிகளவில் பங்குச்சந்தையில் ஈடுபடுகின்றனர். ஆனால், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களும் பங்குச்சந்தையில் ஈடுபட்டு, வருமானம் ஈட்ட வேண்டும் என்பதை இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது. மேலும், டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டும், பலரது பங்குச் சந்தை நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.