தஹாவூர் ராணா அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்.
2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் டேவிட் ஹட்லி மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் தஹாவூர் ராணா ஆகியோர் மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ராணா, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 2014-ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இந்தியா பல ஆண்டுகளாக அவரை நாடு கடத்தக் கோரிக்கை விடுத்து வந்தது.
அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்து, இந்திய அதிகாரிகள் நேற்று இரவு தனியுவிமானத்தில் அவரை அழைத்து வந்தனர். பின்னர், தொடர்புடைய ஆவணங்கள் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்பின், தஹாவூர் ராணா அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார். இப்போது அவர் குண்டுத் துளைக்காத வாகனத்தில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திகார் சிறையில் உயர் பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளார்.