இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஃபேஷன் சந்தை Myntra, தற்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் “M-Now” என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த ஃபேஷன், அழகு மற்றும் வாழ்க்கை முறை தயாரிப்புகளை வெறும் 30 நிமிடங்களில் வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது பெங்களூரில் மட்டும் கிடைக்கும் இந்த சேவை, விரைவில் டெல்லி மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த சேவையில் வெரோ மோடா, மாங்கோ, டாமி ஹில்ஃபிகர் போன்ற பிரபல பிராண்டுகளின் 10,000க்கும் மேற்பட்ட ஸ்டைல்கள் கிடைக்கின்றன. மேலும், வரும் 3-4 மாதங்களில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ளிப்கார்ட்டிற்கு சொந்தமான மைந்திரா, தற்போது மாதம் 70 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. இந்த அளவில் ஃபேஷன் துறையில் விரைவான வர்த்தக சேவையை அறிமுகப்படுத்தும் முதல் பெரிய இந்திய இ-காமர்ஸ் நிறுவனம் என்ற பெருமையை மைந்திரா பெற்றுள்ளது. 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் விரைவான வர்த்தக சந்தை 42 பில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.