நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையம் செல்ல இஸ்ரோ தேர்வு செய்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை, ‘ஆக்ஸியம் திட்டம் 4’-ன் விமானியாக நாசா அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 வீரர்கள் ஜூன் மாதத்துக்குள் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளனர். இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக 4 வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இதற்கு முன்பாக, ககன்யான் திட்டத்தில் உள்ள ஒருவரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப நாசாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு, அவரை நாசாவிற்கு அனுப்பி விண்வெளிப் பயிற்சி அளிக்கப்பட்டது.