நாசா, ஒவ்வொரு நாளும் விண்வெளி சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், டிசம்பர் 12ஆம் தேதி, யானை தும்பிக்கை வடிவிலான நெபுலா புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம், விண்வெளி ஆராய்ச்சியாளரான பெர்னாட் மில்லர் என்பவரால் எடுக்கப்பட்டது. மெக்சிகோவில் உள்ள தனது சொந்த ஆய்வகத்தில் இருந்து இந்த புகைப்படத்தை அவர் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நெபுலா என்பது நட்சத்திரங்களின் பிறப்பிடமாகும். இந்த யானை தும்பிக்கை நெபுலா, IC 1396 பகுதியில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த நெபுலா, 10 முழு நிலவுகளின் அளவைவிட பெரியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெபுலாவில் நட்சத்திர பிறப்பின் போது, வெளியிடப்படும் தூசி படலங்கள் மற்றும் வாயுக்கள், ஒருவகை உருவத்தோற்றத்தினை ஏற்படுத்துகின்றன. தற்போது, யானை தும்பிக்கை நெபுலாவின் ஒரு பகுதி மனித உருவத்தை போன்றதாக தோற்றம் அளிக்கிறது.