அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் தனது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் நிறுவனங்களுக்கு புதிய பணிகளை ஒப்படைத்துள்ளது. இதன்படி, இந்த இரு நிறுவனங்களும் தங்களது சந்திர லேண்டர்களைப் பயன்படுத்தி சந்திரனுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள உள்ளன.
2030 களில் நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், இந்த சரக்குப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஜப்பானின் ஜாக்சா நிறுவனம் உருவாக்கிய அழுத்தமான ரோவரை 2032 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பும். அதேபோல், ப்ளூ ஆரிஜின் நிறுவனம் 2033 ஆம் ஆண்டில் சந்திரனில் மனிதர்கள் தங்கி இருக்கக்கூடிய வாழ்விடத்தை அமைக்கும் பணியை மேற்கொள்ளும். இதற்கிடையில், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் விண்வெளி வீரர்கள் சந்திரனைச் சுற்றி வரும் ஆர்ட்டெமிஸ் 2 திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, 1970 களுக்குப் பிறகு முதல் முறையாக 2026 ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்கள் சந்திரனில் கால் பதிக்கும் ஆர்ட்டெமிஸ் 3 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.














