அண்மையில், நாசா, ‘டார்ட்’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் விண்கலத்தை வேண்டுமென்றே குறுங்கோள் ஒன்றுடன் மோதச் செய்து, அதன் விளைவுகளை ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் ‘மோதல் விளைவு’ கடந்த வாரத்தில் வெற்றிகரமாக நிறைவேறியது. தற்போது, இது குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்களை வைத்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்த உள்ளனர். அதன் பிறகு இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சிலி நாட்டில் உள்ள Southern Astrophysical Research Telescope (Soar) தொலைநோக்கி, டார்ட் விளைவு குறித்த துல்லியமான புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில், விண்கல் அல்லது குறுங்கோளுக்கு பின்னால், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தூசிப் படலம் படர்ந்துள்ளது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட அந்த விண்கல், வால் நட்சத்திரம் போன்ற அமைப்பை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10,000 கிலோமீட்டர் அல்லது 6200 மைல்கள் தொலைவுக்கு இந்த தூசிப் படலம் படர்ந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதன் நீளம் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தூசிப் படலம் குறித்த ஆய்வுகள் வரும் மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து நாசாவின் ஆய்வாளர் டாக்டர். லோரி கிளேஸ் கூறியதாவது: "இந்தத் திட்டம் மனித குல வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் ஆகும். விண்கல் அல்லது குறுங்கோள் தாக்குதலில் இருந்து பூமியைக் காப்பாற்றும் இந்த திட்டம் வெற்றியடைந்துள்ளதாக நம்புகிறோம். டார்ட் திட்டத்தின் மூலம், டைடிமாஸ் என்ற பெரிய அளவு குறுங்கோளை சுற்றி வரும் டைமார்பஸ் என்ற சிறிய அளவு குறுங்கோளில் விண்கலம் மோதப்பட்டது. இதனால், அதன் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த ஆய்வுகள் வரும் மாதங்களில் நடத்தப்படும். நாங்கள் எதிர்பார்த்தபடி, அதே முறையில் சுற்றுவட்டப் பாதை மாறினால், இது மிகப்பெரிய வெற்றி ஆகும். எதிர்காலத்தில், பூமியை நோக்கி வரும் அச்சுறுத்தல்களை இதே முறையில் கையாண்டு ஆபத்தை தவிர்க்க முடியும்” என்று கூறினார்.














