அமெரிக்காவின் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ ஆகியவை இணைந்து நிசார் என்ற பெயரில் பூமியை ஆராயும் செயற்கைக்கோள் திட்டத்தில் பணியாற்றி வருகின்றன. இந்த செயற்கைக்கோள் மூலம், பூமியின் மேற்பரப்பு, பணி சூழ்ந்த பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து முக்கிய தகவல்கள் கிடைக்க பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Nasa Isro Synthetic Aperture Radar (NISAR) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் முக்கிய சுமை பாகம் ஒன்றை சனிக்கிழமை அன்று நாசா இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது.
நாசாவின் நிர்வாகி லாரி லேஷின், "நிசார் திட்டத்தில் இது முக்கியமான மைல் கல்" என்று தெரிவித்தார். மேலும், நிசார் செயற்கைக்கோள் மூலம், மாறிவரும் பருவ நிலையை எதிர்கொள்வதற்கான அமைப்புகளை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "8 வருடங்களுக்கு முன்னர் தொலைநோக்கு திட்டமாக இருந்த நிசார் திட்டம், தற்போது நாசா மற்றும் இஸ்ரோவை நெருக்கமாக இணைத்துள்ளது" என்று கூறினார்.