இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இந்த திட்டத்தின் படி, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவில் ஆய்வு செய்து வருகின்றன. இந்த நிலையில், நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டர் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் சந்திரயான் 3 திட்டத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் உள்ளது. இதன் முப்பரிமாண புகைப்படத்தை நேற்று இஸ்ரோ வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, இன்று, விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை நாசா வெளியிட்டுள்ளது. நிலவைச் சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நாசா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது கவனம் பெற்று வருகிறது.