அமெரிக்காவில் தற்போது இயன் சூறாவளியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூறாவளியின் விளைவுகளால் பல திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து, க்ரூ 5 (Crew 5) திட்டத்தை செயல்படுத்த இருந்தன. அந்தத் திட்டம் இயன் சூறாவளியால் ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 4ம் தேதி க்ரூ 5 கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 5ம் தேதியன்று மாற்றுத்திட்டம் ஒன்றையும் தயார் நிலையில் நிறுவனங்கள் ஏற்படுத்தி உள்ளன. இதனை, நாசா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக, அக்டோபர் 3ம் தேதி, க்ரூ 5 திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
இயன் சூறாவளியால், ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்த உள்ளனர். குறிப்பாக, திட்டத்தை மேலும் தள்ளி வைக்க நேரிடும் அளவிற்கு பாதிப்புகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது. அதற்காக இரு நிறுவனங்களின் விஞ்ஞானிகளும் செப்டம்பர் 30-ஆம் தேதி விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளனர்.
க்ரூ 5 திட்டம் தள்ளிச் செல்ல செல்ல, க்ரூ 4 ஐ சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேற்றும் திட்டமும் தள்ளிப் போகும். அத்துடன், சூறாவளி காரணமாக நாசாவின் ஆர்டெமிஸ் 1 திட்டமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 12ஆம் தேதி ஆர்டெமிஸ் 1 திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. க்ரூ 5 மிஷினில், நாசாவின் நிக்கோலே மான், ஜோஷ் கசாடா ஆகியோர் செல்ல உள்ளனர். மேலும், ஜப்பானின் JAXA விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த கோச்சி வகாடா மற்றும் Roscosmos விண்வெளி வீரர் அணா கிகீனா ஆகியோரும் செல்ல உள்ளனர்.