வியாழனின் சந்திரனான யூரோபாவின் பனிக்கட்டி ஓடுக்கு அடியில் உப்பு நீர் நிறைந்த பெருங்கடல் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த பெருங்கடலில் உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கிறதா என்பதை ஆராய SWIM என்று அழைக்கப்படும் சிறிய நீச்சல் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்கள் பெருங்கடலின் ஆழத்தில் சென்று, அங்குள்ள நீரின் வேதியியல் கலவை மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை ஆராய்ந்து, உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளும். ஜார்ஜியா தொழில்நுட்பக் கழகம் உருவாக்கியுள்ள ஒரு சிறப்பு சென்சார் சிப் மூலம், இந்த ரோபோக்கள் உயிர்கள் வாழத் தேவையான வேதிப்பொருட்களை கண்டறியும்.
அண்மையில், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நாசாவின் SWIM நீச்சல் ரோபோக்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த ரோபோக்கள் ப்ரொப்பல்லர் மூலம் இயங்கி, மிகத் துல்லியமாக இயங்கும் திறன் கொண்டவை. அவை முன்னும் பின்னுமாக நீந்தி, JPL என்ற எழுத்துக்களை உருவாக்கும் அளவுக்கு துல்லியமாக இயங்கக் கூடியவை என்பது இந்த சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த ரோபோக்கள் 16.5 அங்குல நீளம் கொண்டவை என்றாலும், விரைவில் 5 அங்குல நீளமுள்ள சிறிய ரோபோக்களை உருவாக்கும் திட்டம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.