பூமியிலிருந்து 20000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கரீனா விண்மீன் கூட்டத்தில் உள்ள நெபுலா புகைப்படத்தை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம், ஒரு வானவேடிக்கை போல உள்ளதாக நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படம், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரையில் எடுக்கப்பட்டது என நாசா தெரிவித்துள்ளது.
ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில், நெபுலாவின் மையப்பகுதியில் அடர்த்தியான மற்றும் பெரிய அளவிலான நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றி, தூசிப் படலங்கள் மற்றும் வாயுக்கள் நிறைந்துள்ளன. இந்த புகைப்படம் பூமியிலிருந்து தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டம் குறித்த ஆராய்ச்சியை மேம்படுத்துவதாகவும், புகைப்படம் நட்சத்திரப் பிறப்பு குறித்த பல விவரங்களை அளிப்பதாகவும் நாசா பதிவிட்டுள்ளது. நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.