ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புதன்கிழமை அன்று நட்சத்திர பிறப்பின் ஆரம்ப நிலை புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. நட்சத்திரம் எவ்வாறு உருவாகிறது என்பதே பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆராய்ச்சியின் முக்கியப் புள்ளியாகும். அந்த வகையில் இந்த புகைப்படம் கவனம் பெறுகிறது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தில், ஆரஞ்சு மற்றும் நீல நிற தூசிப் படலங்கள் நட்சத்திரத்தில் இருந்து வெளியேறுவது தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தூசிப்படலம் அடர்த்தியாக உள்ள இடங்களில் ஆரஞ்சு நிறமாகவும், அடர்த்தி குறைவாக உள்ள இடங்களில் நீல நிறமாகவும் காட்சி அளிக்கிறது. தொலைநோக்கில் உள்ள இன்ஃப்ரா ரெட் கேமரா தொழில்நுட்பத்தின் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை புலப்படாமல் இருந்த நட்சத்திரத் தோற்றம் குறித்த தகவல்களை அறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.