நமது பிரபஞ்சம், பெருவெடிப்பு நிகழ்வால் உருவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரு வெடிப்பு நிகழ்ந்து 500 முதல் 700 மில்லியன் ஆண்டுகளுக்குள் உருவான 6 பெரிய கேலக்ஸிகளை, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. மேலும், இதுவரை விஞ்ஞானிகள் கருதி வந்த பிரபஞ்ச உருவாக்க வேகத்தை இந்த கேலக்ஸிகள் பொய்யாக்குவதாக அமைந்துள்ளன. இதனால், இந்த புகைப்படம் விஞ்ஞானிகளை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த 6 கேலக்ஸிகள் உருவானபோது, நமது பிரபஞ்சம் அதன் தற்போதைய வயதில் 5% மட்டுமே இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த 6 கேலக்ஸிகளில் இரண்டை, ஹப்பிள் தொலைநோக்கி ஏற்கனவே கண்டறிந்து இருந்தாலும், அவை கவனிக்கப்படாமல் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை, மனிதக் கண்களுக்கு புலப்படாத, அகச்சிவப்பு அலைகளைக் கொண்ட ஜேம்ஸ் வெப்ப கேமரா கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கேலக்ஸிகளை உறுதி செய்ய பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த 6 கேலக்ஸிகளில், எண்ணற்ற நட்சத்திரங்கள் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது குறித்த விரிவான தகவல்கள் ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.