நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப், சூரியனை நெருங்கி பறக்கும் சாதனையை படைக்க உள்ளது. இந்த விண்கலம், சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெறும் 3.8 மில்லியன் மைல்கள் தொலைவில் பறக்க உள்ளது. அதற்கேற்ப, இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள வெப்பக் கவசம், 2,500 டிகிரி பாரன்ஹீட்டைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், ஏற்கனவே சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனா வழியாக பயணித்துள்ளது. இந்த பயணத்தின் போது, மணிக்கு 430,000 மைல் வேகத்தில் பயணித்து, மிக வேகமாக பயணிக்கும் விண்கலம் என்ற சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனா, சூரியனின் மேற்பரப்பை விட ஏன் அதிக வெப்பமாக இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது மற்றும் சூரியனிலிருந்து வெளிப்படும் சூரியக் காற்று பூமியை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது ஆகியவை இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களாகும்.