நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று ரஷ்யாவின் செயலிழந்த செயற்கைக்கோளுடன் மோதும் நிலையில் இருந்தது. மோதல் நிகழ்வு இன்று நிகழலாம் என சொல்லப்பட்டது. ஆனால், நூலிழையில் ரஷ்ய செயற்கைக்கோள் உடனான மோதலை நாசாவின் செயற்கைக்கோள் தவிர்த்துள்ளது.
TIMED என்ற பெயரில் நாசாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், ரஷ்யாவின் COSMOS 2221 செயற்கைக்கோளுடன் மோதும் நிலை இன்று அதிகாலையில் நிகழலாம் என சொல்லப்பட்டது. பூமியில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் இது நேரும் என கணிக்கப்பட்டது. அவ்வாறு நேர்ந்தால், இது பூமியை சுற்றி வரும் மற்ற செயற்கை கோள்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அபாயகரமான சங்கிலித்தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்டது. ஆனால், நல்வாய்ப்பாக, நாசாவின் செயற்கைக்கோள் மோதல் விளைவை தவிர்த்துள்ளது. இது விண்வெளி குப்பை குறித்த எச்சரிக்கை மணியை எழுப்பி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.