சமூக வலைதள தடை எதிர்ப்பு போராட்டம் அரசுக்கு எதிரான கலவரமாக மாறியதால், நேபாள பிரதமர் ராஜினாமா; விமான சேவைகள் பாதிப்பு.
நேபாளத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியா – நேபாள இடையேயான பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகள் மீது நேபாள அரசு தடை விதித்தது. இதற்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம், படிப்படியாக அரசுக்கு எதிரான மக்களின் பெரும் போராட்டமாக மாறியது. ஊழல் மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு வன்முறையாக மாறியதால், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. நிலைமைக்கமைய, ஏர் இந்தியா தில்லி – காத்மாண்டு வழித்தடத்தில் இயக்கப்படும் AI2231/2232, AI2219/2220, AI217/218 மற்றும் AI211/212 என்ற விமான சேவைகள் அனைத்தையும் இன்று ரத்து செய்துள்ளது. அதேபோன்று இண்டிகோ நிறுவனமும் காத்மாண்டு சேவையை ரத்து செய்துள்ளது. நிலைமையை கவனமாகக் கண்காணித்து வருவதாகவும், அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.














