ரஷ்யாவின் தனியார் ராணுவ நிறுவனமாக வாக்னர் ராணுவ குழு அறியப்படுகிறது. இந்தக் குழுவுக்கு ரஷ்யா ராணுவம் மற்றும் அரசாங்கத்துடன் முரண்பாடு ஏற்பட்டு, சில தினங்களாக ரஷ்யாவில் சர்ச்சை ஏற்பட்டு வந்தது. தற்போது, வாக்னர் குழு, ரஷ்யாவில் இருந்து வெளியேறி பெலாரசில் முகாமட்டு உள்ளது. இந்த நிலையில், நேபாள நாட்டின் கூர்க்காக்கள், வாக்னர் ராணுவ குழுவில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரில், பக்த்முத் கைப்பற்றலில், வாக்னர் ராணுவ குழு ரஷ்யாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. மேலும், சர்வதேச அளவில், மிகவும் திறன் படைத்த வீரர்களை கொண்ட ராணுவ குழுவாக அறியப்படுகிறது. அவர்களைப் போலவே, நேபாளத்தை சேர்ந்த கூர்காக்கள், போர் தொழிலில் மிகவும் திறன் படைத்தவர்களாகவும், நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும் அறியப்படுகின்றனர். கடந்த மே மாதம், ஓர் ஆண்டு ராணுவ சேவை செய்தால் ரஷ்ய குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான கூர்க்காக்கள் ரஷ்ய ராணுவ சேவையில் இணைந்தனர். அவர்கள் ஒப்பந்த போர் வீரர்கள் ஆக இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர்கள் வாகனர் ராணுவ குழு உடன் இணைந்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. நேபாள அரசால் இந்த சூழலில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சர்வதேச அளவில் தனியார் ராணுவ குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கி வருவது பல்வேறு நாட்டினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.