ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த நெப்டியூன் கிரகத்தின் அழகிய புகைப்படங்களை, செப்டம்பர் 21ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது. மிகத் துல்லியமாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், நெப்டியூனின் வளையங்கள் காணப்படுகின்றன. இதுகுறித்து, ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் அறிவியல் மற்றும் ஆய்வுத் துறையின் மூத்த ஆலோசகர் மார்க் மெகாக்கிரியன், "இந்த புகைப்படம் நெப்டியூன் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளை விரிவடைய செய்துள்ளது. நெப்டியூன் கிரகத்தின் வளிமண்டலம் குறித்த புதிய கண்ணோட்டத்தை உருவாக்கி உள்ளது" என்று கூறியுள்ளார்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, அகச்சிவப்பு கதிர்கள் மூலம் புகைப்படம் எடுக்கும் அம்சத்துடன் நெப்டியூன் கிரகத்தை படம் பிடித்துள்ளது. இதனால், நெப்டியூன் கிரகம் ஒரு ஒளிரும் கிரகமாகத் தென்படுகிறது. அத்துடன், நெப்டியூன் கிரகத்தின் தூசி நிறைந்த வளையங்களும் புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகின்றன. இந்த கிரகத்தின் மேற்பரப்பில், பனிக்கட்டி மேகங்கள் இருப்பதும் புகைப்படத்தில் தென்படுகிறது.
முன்னதாக, 1989 ஆம் ஆண்டில், நாசாவின் வாயேஜர் 2 விண்கலம், நெப்டியூன் குறித்த ஆய்வுகளை நடத்தியது. அதன் பின்னர், ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தில், நெப்டியூன் கிரகத்தின் வளிமண்டலத்தில் காணப்படும் மீத்தேன் காரணமாக, நெப்டியூன் கிரகம், அடர் நீல நிறத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அதிநவீன NIRCAM ஆல் எடுக்கப்பட்ட புகைப்படம், நெப்டியூன் கிரகத்தை சாம்பல் கலந்த வெண்மை நிறமாகக் காட்டுகிறது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, நெப்டியூன் கிரகத்தின் ஏழு நிலவுகளை படம் பிடித்துள்ளது. இதில், ட்ரைடோன் என்ற பெரிய அளவிலான நிலவு, நட்சத்திரம் போல பிரகாசமாகத் தென்படுகிறது. இது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் படம் பிடிக்கும் தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது. இந்த ட்ரைடோன் நிலவு, நெப்டியூன் கிரகத்தை இடப்புறமாகச் சுற்றி வருவதால், அது கைபர் பெல்ட்டில் இருந்து நெப்டியூனியன் சுற்றுப் பாதையில் வந்ததாக கருதப்படுகிறது. தற்போது வெப் எடுத்துள்ள புகைப்படம், இது குறித்த ஆராய்ச்சியை மேலும் விரிவு படுத்துகிறது.
இந்தப் புகைப்படங்கள் குறித்து பேசிய மெகாக்கிரியன், “நெப்டியூன் கிரகம் தன் மீது விழும் ஒளியின் பெரும் பகுதியை உறிஞ்சிக் கொள்கிறது. அதே சமயத்தில், ட்ரைடோன் நிலவு அவ்வாறு செய்யவில்லை. இதனால், நெப்டியூனை விட ட்ரைடோன் பிரகாசமாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார். எனவே, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ஒவ்வொரு புகைப்படமும் விண்வெளி குறித்த ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் என்பது தெரிய வருகிறது.