நெஸ்லே உணவு தயாரிப்பு நிறுவனம் பச்சிளம் குழந்தைகளுக்கான செர்லாக் உணவை தயாரித்து வருகிறது. இதில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்க்கப்படுவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பப்ளிக் ஐ மற்றும் இன்டர்நேஷனல் பேபி ஃபுட் ஆக்ஷன் நெட்வொர்க் ஆகியவை இணைந்து நெஸ்லே நிறுவனத்தின் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை ஆய்வு செய்தது. இதில், அளவுக்கு அதிகமாக சர்க்கரை மற்றும் தேன் சேர்க்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் நிகழலாம் என கூறப்படுகிறது. அத்துடன், நாள்பட்ட வகையில் சில நோய்களும் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது. இந்த ஆய்வில், ஐரோப்பிய நாடுகளை விட ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகளில் விற்கப்படும் நெஸ்லே தயாரிப்புகளில் சர்க்கரை அளவு கூடுதலாக உள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நெஸ்லே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நெஸ்லே மீது சுமத்தப்பட்டுள்ள புகார் நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியாவின் உணவு கட்டுப்பாட்டு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகளின் விளைவாக நெஸ்லே நிறுவனத்தின் பங்குகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.