தென்கொரிய கண்டன்டுகள் மீது 2.5 பில்லியன் டாலர்கள் பணத்தை முதலீடு செய்ய உள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கி, நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்த முதலீடுகளை விட இது இரட்டிப்புத் தொகை ஆகும். அடுத்த 4 ஆண்டுகளுக்கு, கொரிய சீரியல்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி டெட் சரண்டோஸ், இது தொடர்பாக தென்கொரிய அதிபர் யூன் சூக் இயொல் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். தென்கொரிய அதிபர், நேற்று 6 நாள் பயணமாக வாஷிங்டனுக்கு வருகை தந்துள்ளார். அப்போது, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய தென் கொரிய அதிபர், “தென்கொரியாவின் பொழுதுபோக்கு துறைக்கு இது மிக முக்கிய வாய்ப்பு” என்று கூறியுள்ளார். நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியான பின்னர், ஷோபாக்ஸ், ஸ்டுடியோ டிராகன் போன்ற தென் கொரிய பொழுதுபோக்கு நிறுவனங்களின் பங்கு மதிப்பு 8.75% மற்றும் 2.26% உயர்வை பதிவு செய்துள்ளன. கடந்த சில வருடங்களாகவே, தென்கொரிய நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச அளவில் அமோக ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.