நில அளவைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.பொதுமக்கள், தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. தற்போது, எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்யும் வகையில், இணையவழி விண்ணப்ப முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில், நில அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இணைய வழியிலேயே நில அளவைக்கான கட்டணம் செலுத்தும் முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்த பிறகு, நில அளவை செய்யப்படும் தேதி குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும். இறுதியாக, நில அளவீடு நிறைவடைந்த பிறகு, https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து, நிலத்திற்கான அறிக்கை, வரைபடம் போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














