ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரி பார்க்க, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் - UIDAI, அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/ மற்றும் அதன் அதிகாரப்பூர்வ செயலியான mAadhaar ஆகியவற்றில் இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஆதார் அட்டைக்கு பதிவு செய்யும் போது கொடுக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி நினைவில் இல்லை என்றால், அதிகாரப்பூர்வ தளங்களில் அவற்றின் இறுதி 3 இலக்கங்களை பார்க்க முடியும். அதன் மூலம், பயனர்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அத்துடன், தங்கள் ஆதார் எந்த கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறியாமல், வேறு ஒரு எண்ணுக்கு ஓடிபி சென்று விடுமோ என்ற அச்சத்தில் உள்ளவர்கள், மிக எளிதாக இந்த அம்சத்தின் மூலம் எண்ணை சரி பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைப்பேசி எண்ணை புதுப்பிக்கவும், புதிய எண்ணை இணைக்கவும் விரும்பினால், அதற்கான நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் தளத்தில் இடம்பெற்றுள்ளன.














