செங்கல்பட்டில் ஒரு ஆண்டிற்குள் ரூபாய் 40 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் மின்சார ரயில் சேவை உள்ளதால் அங்கு மக்கள் தொகை புழக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் பஸ் நிலையம் ஜி ஸ் டி சாலையை ஒட்டி ரயில் நிலையம் அருகே உள்ளது. இங்கிருந்து மதுராந்தகம்,காஞ்சிபுரம், திருவள்ளூர்,தாம்பரம், அச்சரப்பாக்கம்,திருசூர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அங்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் புதிய பஸ் நிலையம் அமைக்க 14 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கான டெண்டர் கோரி உள்ளது. மேலும் இப்பணிகளை ஒரு ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கடைகள்,ஓட்டல், பெரிய வளாகம், சுற்றுலா தளங்கள், டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வெடுக்கும் அறை ஆகிய வசதிகளும், ஒரே நேரத்தில் சுமார் 50 பஸ்கள் நிறுத்தும் வகையிலும், 67 நான்கு சக்கர வாகனங்கள், 782 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் வகையிலும் பார்க்கிங் வசதி அமைக்கப்பட உள்ளது.