தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளுக்கான புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 446 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது, தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளை உருவாக்குவது போன்ற பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தான் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக ஜூன் 20-ந்தேதி அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது.
அதன்படி என்ஜினீயரிங் கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மேலும் அந்த கல்லூரிகளை கண்காணிக்க விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி, மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம், கல்வி பணியில் அனுபவம் கொண்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி தொடர்பான உள்ளீடுகள் உள்ளிட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.