தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக பணம் வசூலிப்பதை தடுக்க நடப்பு ஆண்டு முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் நாராயணபாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் தனியார் மருத்துவ கல்லூரிகள் பெற்றோர்களிடம் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த ஆண்டு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. கலந்தாய்வில் இடத்தை தேர்வு செய்ததும், சம்பந்தப்பட்ட மாணவர் அந்த இடத்துக்கான அனைத்து கட்டணத்தையும், மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவிடம் செலுத்திவிட வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாணவர், சேர்க்கை கடிதத்தை மட்டும் கொண்டு சென்றால் போதும். கட்டணத்தை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு கொடுத்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்றார்.














