சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாணவர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருக்க வேண்டும் மற்றும் கூடுதல் பாடங்களைக் கற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விதிமுறைகளில் சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி, பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 75 சதவீதம் வருகைப் பதிவு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 10ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது வழக்கமான ஐந்து பாடங்களுடன், கூடுதலாக இரண்டு பாடங்களை படித்து தேர்வில் பங்கேற்க வேண்டும். இதேபோல், 12ஆம் வகுப்பு மாணவர்களும் கூடுதலாக ஒரு பாடத்தை இணைத்து படிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. மேலும், 2026-27 கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பில் புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் முறை நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன.