அமர்நாத் யாத்திரைக்கு புதிய சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 13,000 அடி உயரத்தில் அமர்நாத் பனி குகை கோவில் அமைந்துள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த பனி குகை கோவிலுக்கு மிகக் குறுகிய பாதை வழியாகவே செல்ல முடியும். இந்த கோவிலுக்குச் செல்ல தற்போது இரண்டு பாதைகள் உள்ளன.
இந்நிலையில், யாத்ரீகர்களின் வசதிக்காக பகல்ஹாம் பாதையில் சந்தன்வாடி - சங்கம் இடையே, 22 கி.மீ.,க்கு புதிய சாலை அமைக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 11 கி.மீ.,க்கு சுரங்கப் பாதையும் அமைய உள்ளது. இது அனைத்து தட்ப வெப்பநிலையிலும் பயணிக்கும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதற்கு 10 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின், ஐந்து ஆண்டுகளில் சாலைப் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.














