நியூசிலாந்து பொருளாதாரம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. 2024-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 1% சரிந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் 1.1% சரிவைக் கண்ட நிலையில், இது 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கொரோனா பெருந்தொற்று காலத்தைத் தவிர்த்து, நாடு எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதாரச் சரிவு ஆகும். நியூசிலாந்து டாலர் மதிப்பும் அமெரிக்க டாலருக்கு எதிராக 1.8% சரிந்துள்ளது. பெரும்பாலான தொழில் துறைகள் இந்த மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்து நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ், உயர் பணவீக்கம் மற்றும் நாட்டின் ரிசர்வ் வங்கியின் கண்டிப்பான நிதிக் கொள்கைகள் தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார். இருப்பினும், 2024-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இருந்து பொருளாதாரம் மீண்டு வந்து, 2025-ஆம் ஆண்டில் வளர்ச்சி பாதையில் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த கருத்தை ஏற்க மறுத்து, அரசாங்கத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் தான் பொருளாதாரத்தை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றன.