இந்தியாவின் இரவு நேர வெளிச்சம், கடந்த 10 ஆண்டுகளில் 43% உயர்ந்துள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் இரவு நேர வெளிச்சம் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணிப்பதற்கு உதவுவதாக கூறப்படுகிறது.
இஸ்ரோவின் அறிக்கைப்படி, குறிப்பிட்ட சில மாநிலங்கள், கடந்த 10 ஆண்டுகளில் 400 சதவீதத்திற்கும் அதிகமாக, இரவு வெளிச்சத்தை வெளியிடுவதில் வளர்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பீகாரில் 474%, மணிப்பூரில் 441%, கேரளாவில் 119%, அருணாச்சல பிரதேசத்தில் 66%, உத்தரப்பிரதேசத்தில் 61%, மத்திய பிரதேசத்தில் 66%, குஜராத்தில் 58% கூடுதல் வெளிச்சம் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 2012 ஆம் ஆண்டே அதிக அளவிலான வெளிச்சம் பதிவானதால், தற்போது நடுத்தர வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.














