கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 பேர் நிபா வைரசால் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, அந்த பகுதியை சுற்றியுள்ள 7 பஞ்சாயத்துகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கோழிக்கோடு பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 11ஆம் தேதிகளில், காய்ச்சல் காரணமாக மர்ம முறையில் 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் தொடர்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி, பரிசோதனை மேற்கொண்டதில், நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் இருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்களுடன் தொடர்பில் இருந்த 168 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கல்வி நிறுவனங்கள் இணைய வழியில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிபா வைரஸ் பாதித்தவரின் உடலில் இருந்து வெளியாகும் உமிழ்நீர், சிறுநீர், ரத்தம், வியர்வை மூலம் நிபா வைரஸ் பாதிப்பு பரவும் என கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்புக்காக இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.














