ரூ.12,000க்கும் குறைவான சீன ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் தடை குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்திய செல்போன் சந்தைகளில் சீனா நிறுவனங்களான ரியல்மி, ஓப்போ, விவோ போன்ற செல்போன்கள் அதிகளவில் விற்பனையாகிறது. இந்த செல்போன் நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் விதித்தது.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், ரூ.12,000க்கும் குறைவான சீன ஸ்மார்ட் போன்களை தடை செய்யும் திட்டமும், வெளிநாட்டு பிராண்டுகளை இந்திய சந்தையில் இருந்து நீக்கும் எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசின் இலக்காக உள்ளது. இந்திய பிராண்டுகளை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சந்தையில் விலை விதிப்பில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அதை அரசு தலையிட்டு முறைப்படுத்தும். 2025-2026ம் ஆண்டில் மின்னணு உற்பத்தியில் ரூ.237 லட்சம் கோடி எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.














