நிகழாண்டில், தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் முழு நேர ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்தியில், இந்த தகவலை தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் நிதிநிலை சூழலை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது. ஆனால், அதே வேளையில், அவர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வரும் போனஸ், பங்கு ஒதுக்குதல், பணி உயர்வு போன்றவை நடைபெறும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.