மத்திய அரசின் உணவுக் கழகத்தில், கையிருப்பில் உள்ள அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை மாநிலங்களுக்கு விற்பனை செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேவையை முறையாக பூர்த்தி செய்வதற்காகவும், மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் போது இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ஆலோசனைகள் நடைபெற்றதாகவும், ஜூன் 13ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த முடிவால், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இல்லாத மக்களுக்கு, இலவசமாக அரிசி வழங்கி வரும் மாநிலங்கள் பாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகம் ஆகியவை பாதிக்கப்பட உள்ளன. “மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 80 கோடி மக்கள் 5 கிலோ இலவச அரிசி பெறுகின்றனர். மாநில அரசுகள் தாங்களாகவே இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். அதற்கேற்றவாறு, மத்திய அரசிடம் இருப்பு உள்ளதா என்பது குறித்து அவர்கள் ஆலோசனைகள் பெறுவதில்லை” என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவின் மூலம், இனிவரும் மாதங்களில் இலவச அரிசி மற்றும் கோதுமை திட்டங்களை செயல்படுத்துவது மாநில அரசுகளுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.