'எந்த சூழ்நிலையிலும் அணு ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது' என ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்குவிடம், இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. எட்டு மாதங்களைக் கடந்தும் போர் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக, ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து, உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் வெளியேறும்படி, அங்குள்ள இந்திய துாதரகம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு, இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று பேசினார். அப்போது உக்ரைனில் உள்ள நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கியதாக, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, பேச்சு மற்றும் துாதரக உறவு வாயிலாக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் எந்தத் தரப்பும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.














