வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை குடிநீர் ஏரி மதகில் வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. தொடர் மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, ஏரி நிறைந்தால் உபரிநீர் திறப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சில தினங்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு வண்ணம் பூசி புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகுகள் மற்றும் 19 கண் மதகுகள், நீர் வெளியேற்றும் ஷட்டர்கள், மின் மோட்டார்கள், ஏரி கரையின் சுவர்கள் ஆகியவற்றில் வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மேலும் வெள்ள தடுப்பு பணிக்காக மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதகுகளின் ஷட்டர்கள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டால் நேரடியாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் கால்வாய்களும் ஆங்காங்கே தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 20.29 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2675 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சென்னை குடிநீருக்காக தினமும் 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.