ராட்சத பலூன்கள் கொண்டு தென்கொரியாவுக்குள் வடகொரியா குப்பைகளை கொட்டியுள்ளது.
தென் கொரியாவுக்குள் ராட்சத பலூன்களில் குப்பைகளை வைத்து அனுப்பியுள்ளது வடகொரியா. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா கடந்த திங்களன்று தனது இரண்டாவது உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முயற்சித்தது. ஆனால் அதை ஏந்தி சென்ற ராக்கெட் சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான ராட்சத பலூன்களில் குப்பைகளை கட்டி அவற்றை தென்கொரியாவுக்குள் நேற்று பறக்க விட்டது. இந்த பலூன்களை மீட்க தென்கொரியா மீட்பு குழுவினரை அனுப்பியது. அவற்றில் வெடிபொருள்கள் அல்லது ரசாயன ஆயுதங்கள் இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதற்கு முன் தென்கொரியா போர் விமான பயிற்சி மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற தரம் தாழ்ந்த செயலை வடகொரியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தென்கொரியா கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த பலூன்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பேட்டரிகள், சாணம், குப்பைகள் உள்ளிட்டவை இருந்தன.














