வடகொரியா, ஒரே நாளில் 23 ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளது. புதன்கிழமை அன்று நிகழ்த்தப்பட்ட இந்த சோதனைகளில் ஒரு ஏவுகணை தென்கொரிய கடற்கரையில் இருந்து 60 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தை எட்டி உள்ளது. இது குறித்து தென்கொரிய அதிபர் யூன் சூக் இயோல், “இது நாட்டின் எல்லைக்குள் விழுந்தது போன்றே கருதப்படும் வகையில் அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனைகளால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த 1945 ஆம் ஆண்டு, வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள் இரண்டாகப் பிரிந்தன. அப்பொழுதில் இருந்து தற்போது வரை, தென்கொரிய எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் ஒரே நாளில் தென் கொரியாவை நோக்கி அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகள் பாய்ந்ததும் இதுவே முதல் முறையாகும். எனவே, இதற்கு பதிலடி தரும் விதமாக, தென்கொரியா, வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏவுகணைகளை ஏவியது. மேலும், வடக்கு கடற்கரை பகுதியில் தென்கொரியாவின் போர் விமானங்கள் ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டன. அப்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரத்தியேக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 360 கிலோ எடையுடன், 270 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று தாக்கும் ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை பரிசோதனையை “பொறுப்பெற்ற செயல்” என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது. மேலும், ஐநா சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் க்ரீன்பீல்ட், “வடகொரியா, கடந்த ஒரு வருட காலமாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி செயல்பட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டி உள்ளார்.