வடகொரியா நாடு, அவ்வப்போது அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. உலக நாடுகள், அணு ஆயுத சோதனைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும்போதும், வடகொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் முறையே 1 மற்றும் 2 ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா மேற்கொண்டது. அதன் பின்னர், கமலா ஹாரிஸின் தென் கொரிய வருகையை எதிர்க்கும் விதமாக, வியாழக்கிழமை அன்றும் 2 ஏவுகணைச் சோதனைகளை நடத்தி உள்ளது. இதன் மூலம், கடந்த 5 நாட்களில் ஐந்து ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா நடத்தி இருப்பது கவனத்திற்குரியது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகியவை இணைந்து கடற்படை ஒத்திகையில் ஈடுபட்டன. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று, ஜப்பான் கடற்படையுடன் இணைந்து, முத்தரப்பு ஒத்திகையில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வியாழன் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவிற்கு வந்தார். அமெரிக்கா, தென்கொரியாவிற்கு ஆதரவளிக்கும் என்பதை உறுதி செய்யும் விதமாக அவரது வருகை இருந்தது. வருகையின் போது, அவர், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தார். மேலும், அணு ஆயுத சோதனைகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை மீறும் செயலாகும் என்று அவர் கூறினார். அத்துடன், அவர், தென்கொரிய அதிபர் யூன் சூக் இயோலுடன், சீனா - தைவான் விவகாரம் குறித்து கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது. அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வியாழக்கிழமை அன்று, மேலும் இரு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது.
வடகொரியா, வரிசையாக ஏவுகணைச் சோதனைகளை நடத்தியுள்ளது குறித்து ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யசுக்காசு ஹமாதா, "இந்த ஏவுகணைச் சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. எங்கள் நாடு மட்டுமல்லாது உலகத்தை அச்சுறுத்தும் விதமாகவும் உள்ளது" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, ஏவுகணைகள் குறித்த விவரத்தையும் அவர் பகிர்ந்தார். "இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன. இரண்டுமே 50 கிலோமீட்டர் உயரத்திலும் 300 கிலோ மீட்டர் தூரத்திலும் தாக்கும் விதமான ஏவுகணைகள் ஆகும். அவை, ஜப்பான் கடற் பகுதியில் இருந்து 200 நாட்டிகல் மைல் தொலைவில் ஜப்பான் கடலில் விழுந்துள்ளன"என்று அவர் கூறினார். தென் கொரிய ராணுவமும் இந்த ஏவுகணைச் சோதனைகளை உறுதி செய்துள்ளது. மேலும், வடகொரியாவின் சன்சோன் பகுதியில் இருந்து இவை ஏவப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளது.