அமெரிக்காவை எதிர்கொள்ள ரஷ்யா உடனான உறவை பலப்படுத்த வடகொரியா முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுய் ரஷ்யாவுக்கு கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ரஷ்ய அதிபர் புத்தின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக வடகொரிய வெளியுறவு அமைச்சகம் கூறி இருப்பதாவது, ரஷ்யாவும், வடகொரியாவும் இரு நாடுகளின் நலனை பாதுகாக்க சர்வதேச அளவில் புதிய ஒழுங்கை ஏற்படுத்த தங்களுடைய நல்லுறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகின்றனர். வட கொரியாவுக்கு புதின் மீண்டும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவளித்து வருகிறது. இந்த ஆதரவுக்கு ரஷ்யா நன்றி தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இது வடகொரியாவுக்கும், ரஷ்யாவுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது. இது வடகொரியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளது.
அவ்வப்போது வடகொரியாவிற்கு எதிராக தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் ரஷ்யாவுடன் நல்லுறவை வடகொரியா பலப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.